மோசே பிறக்கும்போது ஆரோனுக்கு மூன்று வயதாக இருந்தது. மிரியம் போல் அவன் மோசே எவ்வாறு பார்வோனின் மகளால் தத்தெடுக்கப்பட்டு, தாய் யோகெபேத்தை வைத்தே வளர்க்கப்பட்டான் என்ற நிகழ்வுகளை நேரில் காணவில்லை (யாத்திராகமம் 2:1-10). ஆனால் பிற்காலங்களில் மோசே எகிப்திலிருந்து தப்பிச் சென்றதை நினைத்து, அவன் மனதில் ஒரு இரக்கம் எழுந்திருக்க வேண்டும். அவன் வயதானவனாக, சுமார் 83 வயதில், மோசேயேத் தேடிச் சென்றதை வைத்து, தனது சகோதரன் மீதான அவனது அன்பு தெளிவாகத் தெரிகிறது.
விளக்குபவன்:
எரியும் முட்செடி அருகில், மோசே தன்னை இஸ்ரவேல் மக்களை எகிப்திலிருந்து வழிநடத்த ஏற்ற நபராக இல்லையென்று பல காரணங்களை சாக்குபோக்காக கூறி கர்த்தருடன் உரையாடிக் கொண்டிருந்தான். கடைசி காரணமாக, தான் பேச்சாற்றலில் வல்லவன் அல்ல என்றும், பார்வோனிடம் பேச முடியாதவன் என்றும் கூறினான். கர்த்தர் இதைக் கேட்டபோது கோபப்பட்டார்; பின்னர் ஆரோனை வியாக்கியானம் செய்பவனாகவும் அல்லது மோசேக்கு பதிலாக காரியங்களை விளக்கும் நபராகவும் நியமிப்பதாக கூறினார் (யாத்திராகமம் 4:10-16). அதன் பின்னர், மோசேயுடன் இணைந்து ஆரோன் பல ஆண்டுகள் மக்களை வழிநடத்தியதில் சிறப்பாக பங்கு வகித்தான்.
பரிந்துரைத்தல்:
பத்து கட்டளைகளைப் பெறுவதற்காக மோசே சீனாய் மலையில் உபவாசம் இருந்து ஜெபித்துக் கொண்டிருந்தான். கீழிருந்த ஜனங்களோ ஒருவித கலக்கத்துடன் அமைதியற்றவர்களாக இருந்தனர், ஆரோனிடம் தங்களை வழிநடத்த ஒரு கடவுளை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டனர், அவனும் தயங்காமல் உடனே ஒப்புக் கொண்டான். கன்றுகள் தெய்வங்களாக உருவாக்கப்பட்டு வணங்கப்பட்டன. இதைக் கண்ட மோசே, தேவன் எழுதிக் கொடுத்த கட்டளைப் பலகைகளை உடைத்து, சிலைகளை தூசிகளாக்கி மக்களைக் குடிக்க வைத்தான். ஆரோனும் தண்டிக்கப்பட வேண்டியவனாக இருந்தபோதிலும், மோசே அவனுக்காக ஜெபித்தான். மோசே பின்னர் கூறுகிறான்; “கர்த்தர் ஆரோனை அழிக்கத் திட்டமிட்டிருந்தார். நான் அவனுக்காகவும் ஜெபித்தேன்” (உபாகமம் 9:20).
செல்வாக்கு:
மோசே எகிப்திய அரண்மனையில் பயிற்சி பெற்றதால், அரண்மனையில் உள்ள நெறிமுறைகள், விதிகள் மற்றும் பொதுவான காரியங்களில் அவனுக்கு சிறந்த புரிதலும், அறிவும் இருந்தது. மிரியாமும் ஆரோனும் பொறாமைப்பட்டு அவனுக்கு எதிராகக் கலகம் செய்தாலும், பொறுமையாகவும் சாந்தமாகவும், அவன் அவர்களை தெய்வீக முறையில் நடத்தி நல்தாக்கத்தை ஏற்படுத்தினான் (எண்ணாகமம் 12).
பகிர்வு:
ஆரோனை விட இளையவனாக இருந்தாலும், ஆரோனை பிரதான ஆசாரியராகப் பிரதிஷ்டை செய்யும்படி மோசே தேவனால் கட்டளையிடப்பட்டான் (யாத்திராகமம் 30:30). இஸ்ரவேலில் ஆசாரியபணிகள் “ஆரோன் மரபு” என்ற முறையில் நடை பெறுகின்றன, ஏனெனில் பரிசுத்தப்படுத்தப்பட்ட முதன்மை ஆசாரியர் ஆரோன்தான்.
மோசே செய்தது போல் நான் மற்றவர்களிடம் ஒரு நல்தாக்கத்தை ஏற்படுத்துகிறேனா?
Rev. Dr. J.N. Manokaran