ஆகாஸ் யூதாவின் அரசனாக பதினாறு ஆண்டுகள் (கிமு 735–715) ஆட்சி செய்தான். அவன் கர்த்தரின் பார்வையில் தீயவனாக இருந்தான். யூதா தேவனுக்கு விரோதமாகப் பாவம் செய்ததினால், தேவன் அராம் அரசனாகிய ரேசீனையும், இஸ்ரவேல் அரசனாகிய பேகாவையும் யூதாவை எதிர்த்து வர அனுமதித்தார். அவர்கள் யூதாவின்மேல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்கள். இஸ்ரவேல் அரசன் பேகா, யூதாவின் ஒரு இலட்சத்து இருபதாயிரம் வீரர்களைக் கொன்றான். ரேசீன் சில பொதுமக்களை தமஸ்குவுக்கு சிறைபிடித்து கொண்டு சென்றான். இஸ்ரவேல் அரசன் பேகா, யூதாவைச் சேர்ந்த 200,000 பேரைச் ஆண்களையும் பெண்களையும் சிறைபிடித்து கொண்டு சென்றான்
(2 நாளாகமம் 28:8–15).
துணிவான கண்டிப்பு:
பேகாவும் அவனுடைய படையும் வெற்றியடைந்திருந்தனர். பொதுவாக வெற்றி பெற்ற படைகள் அகந்தையடைவது வழக்கம். வெற்றிக் கொண்டாட்டத்தின் நடுவே, தீர்க்கதரிசியான ஓதேத், திரும்பி வரும் அந்தப் படையைச் சந்தித்து, தைரியமாக அவர்களை எதிர்த்து தேவனுடைய செய்தியை அறிவித்தான். தேவனுடைய அழைப்புக்குச் செவிகொடுத்து, கடினமான பணியை அஞ்சாமல் ஏற்றுக் கொண்ட அவனுடைய கீழ்ப்படிதல் உண்மையிலேயே எடுத்துக்காட்டத்தக்கது.
ஓதேத்தின் செய்தியில் நான்கு முக்கிய அம்சங்கள் இருந்தன:
முதலில், யூதாவின் பாவத்தினாலேயே தேவன் யூதாவுக்கு எதிராக இஸ்ரவேலுக்கு வெற்றியைத் தந்தார். இது யூதாவுக்கான தண்டனையாக இருந்தது; இஸ்ரவேல் தேவனுடைய கருவியாக மட்டுமே இருந்தது. ஆகவே அந்த வெற்றிக்கான மகிமை அவர்களுக்குச் சொந்தமல்ல. அவர்கள் கொள்ளையையும், போர்சிறையையும் எடுத்துச் செல்ல உரிமையில்லை. இரண்டாவதாக, இஸ்ரவேல் மிகுந்த கொடூரத்துடன் நடந்துகொண்டது; அவர்களுடைய கோபம் ஆகாயம் வரை ஏறியது. யூதா ராஜ்யத்தின் மக்களின் மரியாதையை அவர்கள் இழிவுபடுத்தி, அவமானப்படுத்தினர். மூன்றாவதாக, யூதாவும் இஸ்ரவேலும் ஒரே பாரம்பரியத்தையும், ஒரே தேவனையும் உடையவர்கள் என்பதை ஓதேத் அவர்களுக்கு நினைவூட்டினான். அவர்கள் பாவத்தில் நிலைத்திருந்தால், தேவனுடைய கோபம் அவர்கள்மேலும் வரும் என்று எச்சரித்தான். நான்காவதாக, சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும் தங்களுடைய தேசத்திற்குத் திருப்பி அனுப்புமாறு அவன் கட்டளையிட்டான்.
நல்ல சமாரியர்கள்
ஓதேத்தின் வார்த்தைக்கு ஆதரவாக நான்கு தலைவர்கள் எழுந்தனர். அவர்கள்; யோகனானின் குமாரன் அசரியா, மெஷிலேமோத்தின் குமாரனான பெரகியா, சல்லூமின் குமாரனான எகிஸ்கியா, அத்லாயின் குமாரனான அமாசா ஆகியோர். அவர்கள் செய்த செயல்கள் உண்மையான இரக்கத்தையும் கீழ்ப்படிதலையும் வெளிப்படுத்தின:
முதலாவதாக, அவர்கள் எல்லா சிறைபிடிக்கப்பட்டவர்களையும் ஒன்றாகக் கூட்டிச் சேர்த்தனர். இரண்டாவதாக, வீரர்கள் கொள்ளையிட்ட பொருட்களிலிருந்து ஆடைகள் எடுத்து, அவர்களை உடுப்பித்து, செருப்புகளையும் அளித்தார்கள். மூன்றாவதாக, அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்தார்கள். நான்காவதாக,
அவர்கள் தங்களைச் சுத்திகரிக்க அனுமதித்து, எண்ணெயால் அபிஷேகம் செய்தார்கள். ஐந்தாவதாக, அவர்களை எரிகோவின் வழியாக அழைத்துச் சென்றார்கள்; பலவீனமானவர்களை கழுதைகளின் மேல் ஏற்றிச் சென்றார்கள். ஆறாவதாக,
எரிகோவில் அனைவரையும் பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு, சமாரியாவுக்கு திரும்பிச் சென்றார்கள் (2 நாளாகமம் 28:15).
தேவனுடைய சத்தியத்தை அஞ்சாமல் அறிவித்த ஓதேத்தைப் போல நான் துணிவான நபரா? இரக்கத்தையும் செயலையும் இணைத்த அந்த நான்கு தலைவர்களைப் போல நான் விடாமுயற்சி உள்ள நபரா?
Rev. Dr. J.N. Manokaran