சில கலாச்சாரங்களில், பொருளாதாரமாகப் பின்தங்கிய குடும்பங்களில், இளம் பெண்களை குடும்பத்தினர் நகரங்களுக்கு அனுப்பி, வணிகவளையத்தில் ஈடுபடச் செய்வது உண்டு. சில மாதங்களில் அவர்கள் பணம் ஈட்டிய பின் வீட்டிற்கு திரும்பி, பின்னர் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். வேதாகம அறிஞர்கள் சிலர், ஓசியா கோமரை மணந்த நிகழ்வும் இதுபோன்ற ஒரு பின்னணியில் நடந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர் (ஓசியா 1:1–3). “ஓசியா” என்ற பெயருக்கு “இரட்சிப்பு” என்ற அர்த்தம் உண்டு.
வரலாற்றுப் பின்னணி
ஓசியாவின் ஊழியம் கிமு 760 முதல் 720 வரை நடைபெற்றது. யூதாவின் அரசர்களான உசியா, யோதாம், ஆகாஸ் மற்றும் எசேக்கியா ஆகியோரின் காலத்திலும், அதே காலத்தில் இஸ்ரவேலில் இரண்டாம் யெரொபெயாம் மற்றும் யோவாசு ஆட்சி செய்த காலத்திலும் அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார். ஓசியா, ஏசாயா மற்றும் மீகா தீர்க்கதரிசிகளுடன் சமகாலத்தவர். இரண்டாம் யெரொபெயாம் ஆட்சிக் காலத்தில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாடு செழித்திருந்தது (2 இராஜாக்கள் 14:23–29). ஆனால் ஆவிக்குரிய ஜீவியமும் நெறிமுறையும் வீழ்ச்சியடைந்த காலமாக அது இருந்தது. இரண்டாம் யெரொபெயாம் விதைத்ததை, அவருக்குப் பிந்தைய ஆறு அரசர்கள் அறுவடை செய்தனர். அவர்களில் நால்வர் வன்முறையால் அகற்றப்பட்டனர்; ஒருவர் அஸீரியாவில் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டு அங்கே மரணமடைந்தார்.
மனைவியைத் தேர்ந்தெடுத்தல்
விபச்சாரியாக இருந்த கோமேரை மனைவியாக ஏற்றுக்கொள்ளும்படி தேவன் ஓசியாவுக்குக் கட்டளையிட்டார். கர்த்தரை விட்டுவிட்டு விக்கிரகங்களைப் பின்பற்றிச் சென்றதன் மூலம் தேவனுடைய மக்கள் ஆவிக்குரிய விபச்சாரத்தைச் செய்ததால் தேவன் அவ்வாறு கட்டளையிட்டார். தேவன் இஸ்ரவேலைத் தமது மனைவியாகக் காணும் உருவகம், பழைய ஏற்பாடு முழுவதும் தொடர்ச்சியாக காணப்படுகிறது.
கோமரை மணந்ததின் மூலம், இஸ்ரவேல் வழிதவறியபோது தேவன் அனுபவித்த வேதனையை ஓசியா தனிப்பட்ட முறையில் உணர்ந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர் (ஓசியா 1:4, 6, 9). யெஸ்ரயேல் என்றால் “சிதறடித்தல்”,
லோ-ருகாமா என்றால் “இரக்கம் இல்லை”, லோ-அம்மி என்றால் “என் ஜனமல்ல”. இந்த மூன்று பெயர்களும், இஸ்ரவேலுக்கு எதிரான தேவனுடைய தீர்ப்பை வெளிப்படுத்துகின்றன. வடக்கு ராஜ்யம் வாக்குத்தத்த தேசத்திலிருந்து வேரறுக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டது.
ஓசியா - மையச் செய்தி:
ஓசியா அறிவித்த செய்திகளின் முக்கியத் தலைப்புகள்; ஆவிக்குரிய நம்பிக்கையின்மை,
பாவத்திற்கும் அதன் விளைவுகளுக்கும் எச்சரிக்கை,
தேவனுடைய அன்பும் இரக்கமும்,
தமது ஜனங்களுக்கான உடன்படிக்கை அன்பு,
மனந்திரும்புவதற்கான அழைப்பு,
மனந்திரும்பாதவர்களுக்கு தீர்ப்பு,
எதிர்காலத்தில் ஏற்படும் மீட்சி பற்றிய நம்பிக்கை. ஓசியா, தேவன் இஸ்ரவேலுடன் கொண்டுள்ள அன்புமிக்க உறவை வலியுறுத்தினார். அவர் தேவனை, கணவன், தோட்டக்காரர், மருத்துவர், மேய்ப்பன் என்ற உருவகங்களில் விவரித்தார். ஜனங்கள் விசுவாசமற்றவர்களாக இருந்தபோதிலும், தேவன் கருணையுள்ளவராகவும், இரக்கமுள்ளவராகவும், நீடிய பொறுமையுடனும், விசுவாசமுடனும் இருந்தார்.
*நான் கர்த்தரை உண்மையாய் நேசிக்கிறேனா?
அல்லது இஸ்ரவேல் போல வழிதவறிச் செல்கிறேனா?*
Rev. Dr. J.N. Manokaran