தடைசெய்யப்பட்ட கனியைப் புசிப்பதன் மூலம் ஆதாமும் ஏவாளும் கண்கள் திறக்கப்பட்டு, தேவர்களைப்போல ஆவார்கள் என்று சாத்தான் வாக்குக் கொடுத்தான் (ஆதியாகமம் 3:5). துயரகரமாக, அவர்கள் அந்தக் கனியைப் புசித்தபோது, சாத்தான் அவர்களுடைய கண்களைக் குருடாக்கினான். அவர்களுடைய அந்தக் கலகச் செயலின் மூலம், மனிதகுலம் முழுவதின் கண்களையும் அவன் குருடாக்கினான் (2 கொரிந்தியர் 4:4). சாத்தானால் குருடாக்கப்பட்டவர்களின் கண்களைத் திறப்பதற்காக, சுவிசேஷத்தை அறிவிக்கும் பணியைப் பவுல் பெற்றார் (அப்போஸ்தலர் 26:16–18). நம்முடைய மனம் மாற்றமடைவதற்காக தேவனுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
தெளிந்த மனமும் புதுப்பிக்கப்பட்ட மனமும்
புதுப்பிக்கப்பட்ட மனமானது, பதற்றம், கோபம், கவலை, ஒப்பீடு, பொறாமை அல்லது விசுவாசக் குறைவு ஆகிய உலகப்பிரகாரமான கண்ணோட்டங்களின் வழியாக உலகத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக, தேவனுடைய சத்தியம், கிருபை மற்றும் ஞானம் ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் உலகத்தைப் புரிந்துகொள்கிறது. தெளிந்த மனம் என்பது மன உறுதிநிலை, தெளிவான பார்வை, பகுத்தறியும் திறன், மதிப்பீடுகள், தீர்ப்புச் செய்யும் திறன் மற்றும் சுயக்கட்டுப்பாடு ஆகியவற்றைக் குறிக்கிறது. இது ஒருவருடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவர் செயல்படுவதன் விளைவாகும் (2 தீமோத்தேயு 1:7). இது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதையும் மனநிலையைச் சீராக வைத்திருப்பதையும் குறிக்கிறது.
தேவனுடைய சித்தம்:
மாற்றமடைந்த மனமுடைய விசுவாசிகள், தேவனுடைய சித்தம் நன்மையும் பிரியமும் பூரணமுமானது என்பதைப் பகுத்தறியும் திறனைப் பெற்றிருக்கிறார்கள்.
அவர்களுடைய தீர்மானங்கள் தேவனைப் பிரியப்படுத்துகிற செயல்களாகவும், அவருக்கு மகிமையைக் கொண்டுவருகிற செயல்களாகவும் அமைகின்றன. ஆகையால், அவர்கள் அர்த்தமுள்ள நோக்கமுடைய வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
விடுதலையும் வெற்றியும்:
தெளிந்த மற்றும் புதுப்பிக்கப்பட்ட மனமுடையவர்கள், ஆதாரமற்ற பயம், பெருமை, கசப்பு, மனக்கசப்பு, காம இச்சை, பேராசை, பொருளாசை, கவலை மற்றும் பதற்றம் போன்ற பாவப் பழக்கங்களிலிருந்து விடுதலை பெறுகிறார்கள். தெளிந்த மற்றும் புதுப்பிக்கப்பட்ட மனமுடையவர்கள், பாவம், சாத்தான் மற்றும் உலகம் ஆகியவற்றின் சோதனைகளை தேவனால் அருளப்பட்ட பெலத்துடனும், மன உறுதியுடனும், ஞானத்துடனும் எதிர்கொள்கிறார்கள்.
சமாதானமும் நிலைத்தன்மையும்:
மாற்றமடைந்த மனம், எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை அனுபவிக்கிறது. அந்தச் சமாதானம் இருதயத்தைக் காத்து வழிநடத்துகிறது (பிலிப்பியர் 4:7).
கர்த்தர்மேல் நம்பிக்கை வைக்கிறவர்கள் அசைக்கப்படாமலும் தளராமலும் இருப்பார்கள் (சங்கீதம் 125:1). அவர்கள் மற்றவர்களிடமும் சமாதானத்துடன் வாழ்கிறார்கள். ஏனெனில், அவர்கள் பொறுமையுள்ளவர்களாகவும், கிருபையுடன் மன்னிக்கிறவர்களாகவும், மற்றவர்களை நேசிப்பதில் தாராளமுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.
எனக்குப் புதுப்பிக்கப்பட்ட மற்றும் தெளிந்த மனம் இருக்கிறதா?
Rev. Dr. J.N. Manokaran