திருட்டு மற்றும் பொய் வழிபாடு

இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் ஒன்றான தாண் கோத்திரம் தான், ஆவிக்குரிய இருள், சிலை வழிபாடு ஆகியவற்றில் முதலில் நுழைந்தது. இத்தகைய செயல்கள், தேசத்தின் அழிவுக்கான விதையை விதைத்தன. இது முழு வேதாகமத்திலும் மிகுந்த சோகத்தைக் கொண்டுள்ள ஒரு அதிகாரமாகும் (நியாயாதிபதிகள் 17:1-13). தேவனையும், அவருடைய பிரமாணங்களையும் மக்கள் புறக்கணிக்கும்போது, தீமை, அசுத்தம் மற்றும் பொய்யான வழிபாடுகள் தேசத்தை நிரப்பி விடும்.

சாபம் மற்றும் ஆசீர்வாதம்:
ஒரு வயதான தாய் 1100 சேக்கல் வெள்ளியை இழந்தாள்;  தன் மகன் மீகாவுடைய காதில் கேட்கும்படியாக சாபமிட்டாள். மீகா, எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவன், அதைக் களவாடிருந்தான். பின்னர் அதைத் தன் தாயிடம் திருப்பிக் கொடுத்தான். உடனே அந்த தாய் சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றினாள்.

திருட்டுக்கான நியாயம்:
மீகா உண்மையாக மனந்திரும்பவில்லை; வெறுமனே வெள்ளியைத் தாயிடம் திருப்பிக் கொடுத்தான். சாபத்திற்கு பயந்து  திருப்பிக்கொடுத்திருக்கலாம், ஆனால் அப்பொழுதும் அவனுக்கு பாவத்தின் உணர்வோ, மனந்திரும்புதலோ இல்லை. அதற்கு மேலாக, அவனின் தாயும் அந்தத் திருடிய வெள்ளியை ஆண்டவருக்காக அர்ப்பணித்ததாகவும், அதைக் கொண்டு ஒரு சிலை அல்லது உருவம் செய்வதாகவும் கூறினாள். இதன் மூலம், மீகா தேவனுடைய நியாயத்தையும் கட்டளைகளையும் முற்றிலும் புரியாமல் தவறான வழியில் நடக்கத் தொடங்கினான்.

சிலைகளைச் செய்தல்: 
மீகாவின் தாய், 200 வெள்ளியை எடுத்து ஒரு பொற்கொல்லனிடம் கொடுத்து ஒரு சிலை செய்யச் சொன்னாள். அந்த சிலை மரத்திலோ கல்லிலோ செதுக்கப்பட்டு வெள்ளியால் பூசப்பட்டது. சிலர் அதை யெகோவாக்கான சிலை எனவும், மற்றவர்கள் பாகால் அல்லது அஸ்தோரேத்தைச் சேர்ந்ததாகவும் கூறுகிறார்கள். ஆனால் அது யாருடையதாக இருந்தாலும், இது தேவனுடைய இரண்டாவது கட்டளையை மீறும் செயலாகும் (யாத்திராகமம் 20:4-5). தேவனை உருவமாக உருவாக்குவதும், சிலைகளை வணங்குவதும் கடும் பாவமாகும்.

மீகாவின் தவறான வழிபாட்டு முறைமை:
மீகா, தனது வீட்டில் ஒரு வழிபாட்டு மையத்தையே அமைத்தான். அதில், ஆசாரியர்கள் பயன்படுத்தும் ஏப்போத்தையும், பழங்காலத்தில் வீட்டுத் தெய்வங்களாக கருதப்பட்ட தெராபீம்களையும் வைத்தான். சீலோவில் இருந்த உண்மையான தேவாலயத்திற்குச் சென்று கர்த்தரை வணங்க வேண்டியிருந்த போதிலும், மீகா தனது வீட்டில் தனக்காகவே ஒரு வழிபாட்டு முறையை உருவாக்கினான். இது தேவனுடைய ஏற்பாட்டையும் கட்டளைகளையும் முற்றிலும் மீறியதாகும்.

மீகாவின் சொந்த ஆசாரிய நியமனம்:
மீகா, ஆசாரியனாக தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தனது சொந்த மகனை ஆசாரியராக நியமித்து பரிசுத்தம் செய்தான். தேவனுடைய ஏற்பாடுகள், லேவிய ஆசாரியர்களை மட்டுமே ஆசாரியராக அனுமதித்திருந்த போதிலும், மீகா தன்னிச்சையாக இந்த பொறுப்பை தன் மகனுக்கே கொடுத்தான். விபரமாகக் கூறப் போனால், அவன் சொந்தமாக பரிசுத்த எண்ணெய் தயாரித்து, தன் மகனை ஆசாரியராக அபிஷேகம் செய்திருக்கலாம். இது தேவனின் நியமனத்துக்கும் வழிமுறைக்கும் முழுமையாக எதிரானது.

வேலை தேடும் லேவியர்கள்: 
தேவன், லேவியர் மத்தியில் உரிமையாக நிலம் கொடுக்கப்பட மாட்டாது என்றும், கர்த்தரே அவர்களின் சுதந்திரம் என்றும், மக்கள் அவர்களை போஷிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தார். மேலும், லேவியரை புறக்கணிக்கக்கூடாது எனவும் இஸ்ரவேலை எச்சரித்தார் (உபாகமம் 10:9; 14:27). ஆனால், இஸ்ரவேல் தேசம் கர்த்தரை மறந்தபோது, லேவியர்களும் புறக்கணிக்கப்பட்டார்கள். தேவனால் அழைக்கப்பட்ட வேலைக்காரராக இருக்க வேண்டிய லேவியர், தற்போது மீகாவிடம் சம்பளத்திற்காக வேலை செய்யும் ஆளாக மாற்றப்பட்டார். இது ஒரு ஆவிக்குரிய வீழ்ச்சியின் வெளிப்பாடாகும்.

 நான் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறேனா? 

Rev. Dr. J.N. Manokaran