நவீன போர்க்களத்தில், ஒரு புதிய தொழில்நுட்பம் உள்ளது. அது குண்டுகளை சில விநாடிகள் காற்றில் மிதக்க (loiter or linger) வைத்து, இலக்கு சரியானதுதானா என்பதை உறுதிசெய்து துல்லியமாகத் தாக்க உதவும். இது தானாகவே அமைக்கப்படலாம் அல்லது கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஒருவரால் இயக்கப்படலாம். சாத்தானின் தந்திரங்களால் நாம் தோற்கடிக்கப்படாமல் இருக்க விசுவாசிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பவுல் அறிவுறுத்தினார். சாத்தானின் தந்திரோபாயங்களை அவர்கள் புரிந்துகொண்டு, அவனது தாக்குதல்களை முன்கூட்டியே தடுக்க வேண்டும் (2 கொரிந்தியர் 2:11)
பதுங்கியிருக்கும் பாவம்:
பாவம் வீட்டு வாசலில் பதுங்கியிருக்கிறது என்று காயீனை தேவன் எச்சரித்தார் (ஆதியாகமம் 4:7). காயீன் கவனமாக இல்லாவிட்டால், அவன் பாவத்தால் மேற்கொள்ளப்படுவான். துரதிர்ஷ்டவசமாக, காயீன் அந்த எச்சரிக்கையைக் கேட்கவில்லை; அவன் பாவத்தை எதிர்க்கத் தவறினான். அவன் மனிதகுல வரலாற்றில் முதல் கொலையாளி ஆனான்.
யோசேப்பு:
சாத்தான் போத்திபாரின் மனைவியை தனது அநீதியான கருவியாகப் பயன்படுத்தினான். அவள் யோசேப்பை மயக்க சரியான தருணத்திற்காகக் காத்திருந்தாள் (ஆதியாகமம் 39:7-12). அவள் யோசேப்பைத் தனியாகக் கண்டபோது, அவனோடு உடலுறவு கொள்ளும்படி வற்புறுத்தினாள். விபச்சாரப் பாவத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, யோசேப்பு தனது மேல் அங்கியை அங்கேயே விட்டுவிட்டு ஓடிப்போனான்.
தாவீது:
ஒரு போர் வீரனாகிய அரசனான தாவீது, போர்க்களத்தில் தனது படைகளுக்குத் தலைமை தாங்கியிருக்க வேண்டும். ஆனால், அவன் தனது பணியை திறமையான தளபதியான யோவாபிடம் ஒப்படைத்தான். எந்த நோக்கமும் இல்லாமல், அவன் மாடியில் உலாவிக்கொண்டிருந்தபோது, சாத்தானின் 'பதுங்கியிருக்கும் குண்டு' போன்ற சோதனையில் விழுந்தான்( 2 சாமுவேல் 11).
ஆகான்:
எரிகோ நகரம் முழுவதும் அழிக்கப்பட வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டிருந்தார். எந்தவொரு பொருளையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று யோசுவா எச்சரித்திருந்தார். இருப்பினும், ஆகான் ஒரு பாபிலோனிய அங்கி, இருநூறு வெள்ளிச் செக்கல்கள், மற்றும் ஐம்பது செக்கல்கள் எடையுள்ள ஒரு பொன் துண்டு ஆகியவற்றால் கவரப்பட்டான். அவன் இந்தச் செல்வத்தைப் பற்றி தன் மனதில் சிந்தித்தபோது, சாத்தானின் 'பதுங்கியிருக்கும் குண்டு' அவனைத் தாக்கியது, அதனால் அவன் தேவ கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனான் (யோசுவா 7:21).
லோத்தின் மனைவி:
சோதோம் மற்றும் கொமோரா நகரங்கள் மீது தேவனுடைய நியாயத்தீர்ப்பு வருவதற்கு முன்பு அங்கிருந்து தப்பி ஓடும்படி லோத்து, அவனுடைய மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்குத் தேவதூதர்கள் கட்டளையிட்டனர். உண்மையில், அவர்கள் அனைவரையும் கைப்பிடித்து நகரத்திற்கு வெளியே இழுத்துச் சென்றனர் (ஆதியாகமம் 19:16). இருப்பினும், அவள் நகரத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை (ஆதியாகமம் 19:26).தேவனுக்கு எதிரான தனது பிடிவாதமான கலகத்தால், சாத்தானின் 'பதுங்கியிருக்கும் குண்டு' அவளைத் தாக்கியது.
சாத்தானின் தந்திரங்களை நான் கருத்தாய் கவனித்து, அவனுக்கு எதிராக நிற்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran