சாக் பூனன் ஒரு கிறிஸ்தவருக்கு இருக்க வேண்டிய முதன்மையான முன்னுரிமைகள் என்ற புத்தகத்தை எழுதினார். சரி நமது முன்னுரிமையாக இருக்க வேண்டிய ஒரே விஷயம் என்னவாக இருக்க முடியும்? அனைத்து விசுவாசிகளும் தேவ இராஜ்யத்திற்கும் நீதிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (மத்தேயு 6:33) என்பதை கூறுகிறோம். அதுவும் சரிதான்; ஆனால் இராஜ்யத்தின் முன்னுரிமை என்றால் என்ன? வேதாகமத்தில், சில கதாபாத்திரங்கள் மட்டுமே ஒரே விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தினார்கள்.
எனக்குத் தெரிந்த ஒன்று:
பிறவியிலேயே குருடனாகப் பிறந்த மனிதன் நம் ஆண்டவரைப் பற்றி விமர்சிப்பவர்களிடம் இவ்வாறாகச் சொன்னான்; அதாவது “அவர் பாவியென்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு ஒன்று தெரியும். நான் முன்பு குருடனாக இருந்தேன். இப்போது என்னால் பார்க்க முடிகிறது” (யோவான் 9:25). ஒவ்வொரு விசுவாசியும் ஒரு காலத்தில் சாத்தானால் குருடாக்கப்பட்டார்கள், ஆனால் இப்போது மகிமையான நற்செய்தியைப் பார்க்கவும், உணரவும், புரிந்துகொள்ளவும் முடிந்தது என்று சாட்சியமளிக்க முடியும்.
தேடுகின்ற ஒன்று:
தாவீது ஒரு வலிமைமிக்க ராஜாவாக இருந்தபோதிலும், அவனுடைய ஒரே ஆசை அல்லது கோரிக்கை; “என் வாழ்க்கை முழுவதும் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கி கர்த்தருடைய அழகைக்கண்டு அவர் அரண்மனையை தரிசிக்க அனுமதியும்” (சங்கீதம் 27:4-5). சர்வவல்லவரின் நிழலில் தங்கி அவருடைய அழகை அனுபவிப்பது மட்டுமே தாவீது விரும்பிய ஒரே விஷயம்.
உன்னிடத்தில் இருக்கும் குறைவு:
பணக்கார இளம் ஆட்சியாளர் மனித தரத்தின்படி பெரியவர். அவன் பணக்காரன், ஆட்சியாளன், செல்வாக்கு மிக்கவன், நித்திய காரியங்களுக்கான ஆசையும் கொண்டிருந்தான். கர்த்தர் அவனை அன்புடன் பார்த்து, “உனக்குக் குறைவு ஒன்று, நீ போய் உனக்கு உரியவற்றையெல்லாம் விற்றுவிடு. அப்பணத்தை ஏழை மக்களுக்குக் கொடு. உனக்குப் பரலோகத்தில் நிச்சயம் பொக்கிஷமிருக்கும். பிறகு என்னைப் பின்பற்றி வா” என்றார் (மாற்கு 10:21).
உனக்குத் தேவையான ஒன்று:
மார்த்தா பல காரியங்களைப் பற்றி கவலைப்பட்டு வருத்தப்பட்டாள். மரியாள் தனக்கு உதவிக்கரம் நீட்டவில்லை என்று அவள் கர்த்தரிடம் புகார் செய்தாள். இருப்பினும், மரியாளிடமிருந்து பறிக்க முடியாத அவளுடைய சரியான, நித்திய தெரிவுக்காக கர்த்தர் பாராட்டினார். மரியாள் அவருடைய பாதத்தில் அமர்ந்து அவருடைய போதனைகளைக் கேட்கத் தேர்ந்தெடுத்தாள் (லூக்கா 10:42).
பவுல் செய்யும் ஒரே ஒரு விஷயம்:
பவுல் எழுதுகிறார், கடந்த காலத்தை (வெற்றிகள், தோல்விகள், துயரங்கள், துன்பங்கள், சாதனைகள்) மறந்து, எதிர்காலத்தை நோக்கி, பரலோக அழைப்பு மற்றும் வெகுமதியில் கவனம் செலுத்துவது மட்டுமே சரியான விஷயம் (பிலிப்பியர் 3: 13-14). அப்போது கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஊழியத்தை முடித்த பவுல் தனது வாழ்க்கைத் தேடலைப் பற்றி அறிந்திருந்தார். தான் அழைக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட, தேவனால் பிடிக்கப்பட்ட நோக்கத்தைப் பற்றிக்கொள்ள விரும்பினார்.
ஆக எனது மிக உயர்ந்த முன்னுரிமை என்ன?
Rev. Dr. J.N. Manokaran