ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பவர்களில், ஒருவருக்கு இரத்த சாட்சியாக மரணம் கிட்டுகிறது; இன்னொருவர் விடுவிக்கப்படுகிறார். இது மனிதருக்குப் புதிர் போலத் தோன்றுகிறது. எரேமியா கர்த்தரால் காத்துக் கொள்ளப்பட்டார், ஆனால் உரியா தியாகியாக மரித்தார் (எரேமியா 26:20,23). யாக்கோபு இரத்த சாட்சியாக மரித்தார், ஆனால் பேதுரு தேவதூதர்களால் சிறையில் இருந்து அதிசயமாக விடுவிக்கப்பட்டார் (அப்போஸ்தலர் 12:2, 5–12). சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நல்ல காரணமும், தெய்வீக நோக்கமும் உண்டு. அது மாத்திரமல்ல இன்னும் சிலருக்கு கடின ஊழியத்தையும் வழங்குவதற்கு நல்ல காரணத்தையும் நோக்கத்தையும் கொண்டுள்ளார்.
யெகோவாவின் ஜூவாலை:
‘உரியா’ என்ற பெயரின் பொருள் யெகோவாவின் ஜூவாலை என்பதாகும். அவர் எரியவும் பிரகாசிக்க செய்யும் விளக்கமாகவும் கர்த்தருக்காக இருப்பார் என்று அவரது தந்தை சேமாயாவும் தாயாரும் அந்தப் பெயரை வைத்தனர். இந்தக் குடும்பம் கீரியத்-யேரீமில் இருந்தது. அவர் யோயாக்கீம் ராஜாவின் ஆட்சிக் காலத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தார்.
அரசியல் சூழல்:
யூதேயா எகிப்திய பார்வோன், நெகோவின் கீழ் ஒரு அடிமையாக இருந்தது.
தீர்க்கதரிசனம்:
எரேமியாவைப் போலவே, உரியாவும் பாபிலோனியர்கள் விரைவில் படையெடுத்து, எருசலேமை அழித்து, யூதர்களைச் சிறையாட்களாக அழைத்துச் செல்வார்கள் என்று தீர்க்கதரிசனம்பண்ணினார். யோயாக்கீம் ராஜா இதைக் கேட்டதும், உரியாவை கொல்ல நினைத்தான்.
எகிப்துக்கு தப்பிச்செல்லல்:
மரண தண்டனைக்குப் பயந்து, பாதுகாப்பான இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஊரியா எகிப்துக்கு தப்பிச் சென்றார். ஆனால், அந்தத் தீர்க்கதரிசனத்தால் பார்வோனும் மகிழ்ச்சியடையவில்லை. இறுதியில், தனது ஆட்சிக்கீழ் இருந்த யூதாவே பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டது.
யோயாக்கீமின் தூதர்கள்:
எல்நாதான் தான் எகிப்துக்குத் தூதராக அனுப்பப்பட்டார்; அவர் உரியாவை கைது செய்து எருசலேமுக்கு அழைத்து வந்தார்.
தலை துண்டிக்கப்பட்டது:
யோயாக்கீமின் கட்டளைப்படி உரியா தலை துண்டிக்கப்பட்டு, அவரது உடல் சாதாரண மக்களின் கல்லறைகளில் வீசப்பட்டது.
மறக்கப்பட்ட வீரர்கள்:
விசுவாச மாவீரர்கள் பட்டியலில் (Hall of Fame) பலர் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் இகழப்பட்டார்கள், அடிக்கப்பட்டார்கள், இரண்டாக அறுக்கப்பட்டார்கள், தலை வெட்டப்பட்டார்கள், துன்புறுத்தப்பட்டார்கள், பாலைவனங்களில் அலைந்தார்கள் (எபிரேயர் 11:36–38). சத்தியத்தை துணிவுடன் அறிவித்து சாட்சியாக மரணம் அடைந்தவர்களில் உரியாவும் ஒருவராவார்.
இன்றைய இரத்த சாட்சிகள்:
உலகத்தின் பல இடங்களில் கிறிஸ்தவர்கள் இகழ்ச்சி, பாகுபாடு, புறக்கணிப்பு, மிரட்டல், வன்முறை, கூட உயிரிழப்பு ஆகியவற்றை எதிர்கொள்கிறார்கள். சில துன்புறுத்தல்கள் மதவாதிகளிடமிருந்தும், சில அரசியல்வாதிகளிடமிருந்தும் வருகிறது. பெரும்பாலும், கர்த்தர் முன்பே சொன்னதுபோல, இத்தகைய துன்புறுத்தல்களுக்கு எவ்வித காரணமும் இல்லை. அவரது பரிசுத்த நாமத்திற்காக துன்புறுத்தப்படுவது பாக்கியமே (மத்தேயு 10:22; 5:11-12 யோவான் 15:25).
நான் கர்த்தருக்கு உண்மையுள்ள நபராகவும், அவருடைய நாமத்திற்காக உண்மையுள்ள சாட்சியாகவும் இருக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran