ஞானமுள்ள பிரசங்கிகளும் போதகர்களும்

போதகனாகவும் பிரசங்கியாகவும் இருப்பது ஒரு மிக உயர்ந்த அழைப்பாகக் கருதப்படுகிறது. காரணம், அவர்களின் பணியின் தாக்கம் தனிநபரை மட்டுமல்ல, சமூகத்தையும், ஒரு தேசத்தையும் கூட ஆழமாகப் பாதிக்கிறது. எருசலேமின் பிரசங்கி, நல்ல போதகர்களும் பிரசங்கிகளும் ஒரே மேய்ப்பரிடமிருந்து பெறப்பட்ட ஞானத்தை அறிவிப்பவர்கள் என்று எழுதுகிறார்.  “ஞானிகளின் வார்த்தைகள் மிருகங்களை வழி நடத்தப் பயன்படும் கூர்மையான கோல்களைப்போல இருக்கும். அவர்களின் போதனைகள் என்றும் உடைந்துபோகாத உறுதியான ஆப்புகளைப் போன்றிருக்கும். வாழ்க்கைக்கு வழிகாட்டும் இப்போதனைகள் நம்பிக்கைக்கு உரியவை. இந்த ஞானப் போதனைகள் எல்லாம், அதே மேய்ப்பனிடமிருந்து (தேவன்) வந்தவை” (பிரசங்கி 12:11). 

போதிக்க வேண்டிய சவால்:
அவன் ஞானமுள்ளவனாக இருந்ததால் மக்களுக்குப் போதித்தான். ஆனால், இன்று பல ஞானமுள்ளவர்கள் தங்கள் வார்த்தைகள் மதிக்கப்படுவதில்லை என்பதனால் மௌனமாகவே இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது. மக்கள் கேட்பார்களா, மறுப்பார்களா, எதிர்ப்பார்களா என்பதைக் கவனிக்காமல், எசேக்கியேல் தேவனுடைய வார்த்தையை அறிவிக்க அழைக்கப்பட்டான் (எசேக்கியேல் 2:7). அதேபோல், மக்கள் எவ்வாறு பதிலளித்தாலும் தேவனுடைய ஜனங்கள் பிரசங்கிக்க அழைக்கப்பட்டுள்ளனர். பவுல் இளைஞன் தீமோத்தேயுவிடம், சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் வார்த்தையைப் பிரசங்கி என்று உபதேசிக்கிறார் (2 தீமோத்தேயு 4:2). இன்றைய டிஜிட்டல் உலகின் சத்தங்களுக்கும் சமூக ஊடகங்களின் பெரும் கவனச் சிதறலுக்கும் மத்தியில், கிறிஸ்தவர்கள் தொடர்ந்து, நிலைத்திருக்கும் போதனையிலும் பிரசங்கத்திலும் ஈடுபட அழைக்கப்படுகிறார்கள்.

ஒரே மேய்ப்பர்:
பழைய ஏற்பாட்டில் தேவன் தம்முடைய ஜனங்களின் மேய்ப்பராக சித்தரிக்கப்படுகிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நல்ல மேய்ப்பர், பெரிய மேய்ப்பர், தலைமை மேய்ப்பர் ஆவார் (யோவான் 10:11; 1 பேதுரு 5:4). அனைத்து போதனைகளும் அந்த ஒரே மேய்ப்பரிடமிருந்து; அதாவது பரிசுத்த வேதாகமத்திலிருந்து பெறப்பட வேண்டும் என்று பிரசங்கி வலியுறுத்துகிறார்.

முட்கோல்களும் நன்கு அடிக்கப்பட்ட ஆணிகளும்:
வார்த்தைகளின் வல்லமையை விளக்க பிரசங்கி மிகச் சரியான உவமைகளை பயன்படுத்துகிறார். நம்பிக்கையுடன் போதிக்கவும், சவால் விடவும், மனிதர்களின் சிந்தனையும் நடத்தையும் மாற்றவும், தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்ற வழிநடத்தவும் தேவன் வார்த்தைகளை ஒரு கருவியாக அளித்துள்ளார். சுவிசேஷம் ஒரு முள் குத்தினது போல் வழிநடத்துகிறது; ஆனால் முள் கொட்டுகளுக்கு விரோதமாக உதைப்பவர்கள் தாங்களே சேதமடைவார்கள் (அப்போஸ்தலர் 26:14). உறுதியாக அடிக்கப்பட்ட ஆணிகள் நிலைத்தன்மையைத் தருவது போல, தேவனுடைய வார்த்தையை கேட்டு அதன்படி நடப்பவர்கள் உறுதியாக நிலைத்திருப்பார்கள். இத்தகைய போதனை மனதில் உறுதியாகப் பதிந்து, ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

எவ்வாறு போதிக்க வேண்டும்?
ஒரு ஞானமுள்ள மனிதனோ அல்லது வேத அறிஞனோ, அறிவை ஏற்றுக்கொள்ளத்தக்க, பொருத்தமான வார்த்தைகளால் போதிக்க வேண்டும் என்று பிரசங்கி கூறுகிறார். அவர் நேர்மையான, சத்தியமான வார்த்தைகளைப் போதிக்க வேண்டும். போதனை தெளிவாகவும், நேர்த்தியாகவும் இருந்து, முள் போல் வழிகாட்டவும், ஆணிகள்போல் உறுதிப்படுத்தவும் வேண்டும். தேவபக்தியுள்ள பிரசங்கிகள், தங்களுடைய போதனை கேட்கப்படவும், புரிந்துகொள்ளப்படவும், கீழ்ப்படிதலோடு நடைமுறைக்கு வரவும் ஜெபத்தோடு பாடுபடுகிறார்கள் அல்லது பிரயாசப்படுகிறார்கள்.

நான் சத்தியத்தைப் போதிக்கிறேனா அல்லது மௌனமாக இருக்கிறேனா?
 

Rev. Dr. J.N. Manokaran